காணும் பொங்கலையொட்டி தமிழகம் முழுவதும் கொண்டாட்டம்; சென்னை கடற்கரையில் அலைமோதிய மக்கள் கூட்டம்…

தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் சுற்றுலாத்தலங்கள், கேளிக்கை பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று காணும் பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

பொங்கல் பண்டிகையின் நிறைவு நாள் கொண்டாட்டமாக நேற்று காணும் பொங்கல் கொண்டாடப்பட்டது. காணும் பொங்கல் என்பது பெற்றோர், உறவினர்கள் நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ஆசி பெறும் தினமாகும். உறவினர்கள், நண்பர்கள் ஒன்று திரண்டு சுற்றுலா தலங்களுக்கு சென்று மகிழ்ச்சியோடு காணும் பொங்கலை கொண்டாடுவதை காலம் காலமாக வழக்கமாக உள்ளது.

அதன்படி, தமிழகம் உள்ள மக்கள் காணும் பொங்கலை வெகு சிறப்பாக கொண்டாடினர். காணும் பொங்கலையொட்டி சென்னையில் உள்ள சுற்றுலா தலங்கள், மெரீனா, பெசன்ட் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் குடும்பத்தோடு லட்சக்கணக்கில் குவிந்து காணும் பொங்கலை கொண்டாடினர்.

இதேபோல், சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் உள்ள கேளிக்கை பூங்காக்கள், முட்டுக்காடு படகு குழாம், கோவளம் கடற்கரை, வடநெம்மேலி பாம்பு பண்ணை, மாமல்லபுரம் கடற்கரை போன்ற பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

காணும் பொங்கலுக்கு மெரினாவில் மக்கள் கடலுக்குள் இறங்குவதை தடுக்க போலீசார் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். கடலில் இறங்கி குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டு. சுமார் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். காணும் பொங்கலையொட்டி, அரசு சார்பில் சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

நீலகிரி மாவட்ட உதகை படகு இல்லத்தில் சுற்றுலா பொங்கல் கலை விழா நடைபெற்றது. விழாவை மாவட்ட ஆட்ச்சியர் இன்னசென்ட் திவ்யா குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். இவ்விழாவில் நீலகிரி மாவட்ட பழங்குடியின மக்களான கோத்தர் இன மக்கள் கலந்து கொண்டு பொங்கல் விழாவிற்கான ஏற்பாடுகள் செய்து சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் பழங்குடியின மக்கள், பொங்கல் வைத்து விழாவை சிறப்பித்தனர். பின்னர் தங்களின் பாரம்பரிய உடை அணிந்து பாரம்பரிய நடனமாடி சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளித்தனர். இவ்விழாவில் சுற்றுலா பயணிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *