நடிகர் ரஜினிகாந்த் அரசியல் களத்தின் முன்னோட்டமாக ரஜினி மன்றம் என்ற பெயரில் இணையதளம் மற்றும் புதிய செயலியை தொடங்கியுள்ளார்.
கிட்ட தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு தமது ரசிகர்களின் எதிர்பாரப்பை நிறைவேற்றும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் அரசியல் களம் காண இருப்பதாக அறிவித்தது தமிழக அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசியலுக்கு வருவது உறுதி என்றும் சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்றும் ரஜினி அறிவித்தார். இதையடுத்து அவர் கட்சியின் பெயர், கொடி குறித்த ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் அரசியல் களத்தின் முன்னோட்டமாக ரஜினி மன்றம் என்ற பெயரில் இணையதளம் மற்றும் புதிய செயலியை தொடங்கியுள்ளார். அதில் இணைய விரும்புபவர்கள் தங்கள் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண் ஆகியவற்றை பதிவு செய்து உறுப்பினர் ஆகலாம் என்று ரஜினி கூறியுள்ளார். இதுகுறித்து தமது டிவிட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதனிடையே நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து அரசியல் கட்சியினர், திரைபிரபலங்கள் ஏராளமானோர் கருத்து கூறி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறிய கடம்பூர் ராஜூ, வார்த்தைக்கு அர்த்தம் தெரியாதவர்கள் அரசியலில் ஆழம் பார்க்க ஆசைப்படுவதாகவும், சிஸ்டம் சரியில்லை எனக் கூறும் ரஜினிக்கு, என்ன சிஸ்டம் சரியில்லை என்று கூற தெரியவில்லை என்று விமர்சித்துள்ளார்.
சிஸ்டம் சரியில்லை என கூறும் நடிகர் ரஜினிக்கு, அரசியலுக்கு வந்த பின்பு சிஸ்டம் புரியும் என்று அதிமுக எம்.பி வைத்திலிங்கம் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஜனநாயக நாட்டில் யாருக்கும் அரசியல் கட்சி தொடங்க உரிமையுள்ளது என்று தெரிவித்தார்.
ஆன்மிக அரசியல் என ரஜினி அறிவிப்பு வெளியிட்டு இருப்பதை யாரும் தவறாக சித்தரிக்க வேண்டாம் என்று காந்தியவாதி தமிழருவி மணியன் விளக்கம் அளித்துள்ளார்.
ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கவுதமன், ரஜினிக்கு பின்னால் பாஜக இருப்பதாக குற்றம் சாட்டினார். மேலும் ரஜினி எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என்றும் இயக்குனர் கவுதமன் கூறியுள்ளார்.

