கஜா புயல் நிவாரணப் பணிகள் கண்காணிக்கப்படும் என்று கூறியுள்ள உயர்நீதிமன்றம், ஒரே இரவில் அனைத்து பணிகளும் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்க முடியாது என தெரிவித்துள்ளது.
புயல் பாதித்த நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை தேசிய பேரிடர் பகுதிகளாக அறிவிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மக்கள் கடந்த ஐந்து நாட்களாக உணவு, குடிநீர், மின்சாரம் இன்றி இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளதாகவும், பலியான விலங்குகளின் உடல்கள் அப்புறப்படுத்தாததால், தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு 50 லட்சம் ரூபாயும், உயிரிழந்த கால்நடைகள், சேதமடைந்த பயிர்களுக்கு 10 லட்சம் ரூபாயும் இழப்பீடு வழங்கவும், சேதமடைந்த வீடுகளுக்கு பதில் புது வீடுகள் கட்டித்தரவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் புயல் நிவாரணப் பணிகளுக்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி முதலமைச்சர் அறிவித்துள்ளதாக செய்தித் தாள்களில் பார்த்ததாக நீதிபதிகள் கூறினர். நிவாரணப் பணிகளை நீதிமன்றம் கண்காணிக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், புயல் பாதிப்பு குறித்து பிரதமர், முதல்வரிடம் கேட்டறிந்துள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளதாக கூறிய நீதிபதிகள், ஒரே இரவில் அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்க முடியாது என்று கூறி, விசாரணையை நாளை மறுநாளுக்கு ஒத்திவைத்தனர்.

