கச்சா எண்ணெய் விநியோகத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும், ஆனால் அதுதொடர்பான புவிசார் அரசியல் நிலவரமே விலை உயர்வுக்கு காரணம் என்றும் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு பொருளாதார தடைகள் விதிக்கப்போவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதனால் இம்மாத தொடக்கத்தில், கச்சா எண்ணெய் விலை 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பேரலுக்கு 86.74 டாலர்களாக உயர்ந்தது.
இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், கச்சா எண்ணெய் கிடைப்பதில் எவ்வித பிரச்சனையும் இல்லை என்றும், உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள புவிசார் அரசியல் நிலையால் ஏற்படும் கவலைகளே முக்கியமான பிரச்சனை என்றும் கூறினார்.
ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்குவதால், பொருளாதாரத் தடை விதிப்பில் இருந்து இந்தியா அமெரிக்காவிடம் விலக்கு கோரியுள்ளதா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை. ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்குவது தொடர்பான நிலைப்பாட்டை ஏற்கெனவே இந்தியா தெளிவுபடுத்திவிட்டதாக தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

