உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகக் கருத்துக் கூறியதாக பாஜக தலைவர் அமித் ஷா மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யக் கோரி பீகார் மாநில நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குப் பெண்களும் சென்று வழிபடலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது குறித்துப் பேசிய பாஜக தலைவர் அமித் ஷா, மக்களின் நம்பிக்கையைத் தகர்ப்பதாக நீதிமன்றத் தீர்ப்பு இருக்கக் கூடாது எனக் கருத்துத் தெரிவித்தார். இந்நிலையில் பீகார் மாநிலம் சீதாமாரியில் உள்ள நீதிமன்றத்தில் அமித் ஷா மீது சமூக ஆர்வலர் தாக்கூர் சந்தன் சிங் ஒரு புகார் அளித்துள்ளார்.
அதில் சபரிமலை குறித்த அமித் ஷாவின் கருத்து பெண்களின் உணர்வைப் புண்படுத்தும் வகையிலும், கூட்டாட்சி முறையைச் சீர்குலைக்கும் வகையிலும், தேர்தல் ஆதாயம் தேடும் வகையிலும் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இதனால் அமித் ஷா மீது, தேசத் துரோகம், குற்றச்சதி ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிய வேண்டும் என்று அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது. இந்தப் புகாரை நவம்பர் ஆறாம் நாள் விசாரிப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

