ஈரோடு அருகே தொடர்மழை காரணமாக நிரம்பிய குளம் – ஊருக்குள் புகுந்த தண்ணீர்

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் குளம் நிரம்பி வழிந்து வீடு, கடைகளுக்குள் தண்ணீர் புகுந்து வீட்டில் இருந்த பொருட்கள் சேதமடைந்தன.

நம்பியூர், கலிஞ்சியம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரு தினங்களாக பெய்த தொடர் கனமழை காரணமாக இந்திராநகர் குளம் நிரம்பியது. கீரிப்பள்ளம் ஓடை வழியாக தடப்பள்ளி வாய்க்காலைச் சென்றடையும் இந்த நீர், ஓடையை முறையாக தூர்வாராததால் ஊருக்குள் புகுந்ததாகக் கூறப்படுகிறது. முத்துஷா வீதி, மார்க்கெட், பேருந்து நிலையம், கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் வீடு, கடைகளில் வெள்ளம் புகுந்தது. இரவு முழுவதும் மின்சாரம் இல்லாமல் அவதியுற்று வந்த மக்கள், அதிகாலையில் வீடுகளை நோக்கி வெள்ளம் வருவதைக் கண்டு அதிர்ந்து போயினர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது.

இந்த நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் நஞ்சக்கவுண்டன்பாளையம் பகுதியில் பாதிக்கப்பட்ட இடங்களை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், வீடுகளில் புகுந்த நீரை அப்புறப்படுத்த துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், வடிகால்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றும் கூறினார். மேலும் கால்வாய் ஓரங்களில் உள்ள வீடுகளை உரிமையாளர்களின் அனுமதியோடு அகற்றி, வேறு இடங்களில் வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *