இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு எதிரான புதிய மசோதாவை செயல்படுத்தாத வகையில் அழுத்தம் தர வேண்டும்… பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்;

எல்லை தாண்டும் மீனவர்களுக்கு பெருந்தொகை அபராதம் விதிக்கும் இலங்கை அரசின் முடிவை செயல்படுத்தாத வகையில் அழுத்தம் தருமாறு, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமருக்கு முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில் கடலில் எல்லை தாண்டும் மீனவர்களுக்கு, பெருந்தொகையை அபராதமாக விதிக்கும் வகையில், இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டம் குறித்து கவலை தெரிவித்துள்ளார். தங்களுக்குரிய பாரம்பரிய கடற்பகுதியான பாக் சல சந்தியில், வெகுகாலமாக மீன் பிடித்து வரும் தமிழக மீனவர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் அபராதம் விதிக்க இந்த சட்டத்திருத்தம் வழி செய்வதையும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இதன் மூலம் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் இலங்கை அரசின் கருணையை நம்பியதாக மாறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இரு தரப்பு மீன்வளத்துறை அமைச்சர்களும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ள சூழலில், இலங்கை அரசின் இத்தகைய நடவடிக்கை வேதனை அளிப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் தங்கள் படகுகளுடன் புதன் கிழமை கைது செய்யப்பட்டதையும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இது வரை கைது செய்யப்பட்டு இலங்கை சிறைகளில் இருக்கும் 108 மீனவர்களையும், 165 படகுகளையும் மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். இலங்கை அரசின் புதிய சட்டத்திருத்தத்தை செயல்படுத்தாத வகையில் வெளியுறவு அமைச்சகத்தின் மூலம் அழுத்தம் தர வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடியை கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *