இன்றுடன் நிறைவடைகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ; ஆளுநரின் உரைக்கு முதலமைச்சர் எடப்பாடி நன்றி தெரிவித்தவுடன் முடிவடையும் என தகவல்…

பரபரப்பான அரசியல் சூழலில் கடந்த 8ம் தேதி கூடிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. இந்த கூட்டத்தொடர் குறித்த சிறப்பு தொகுப்பை சுருக்கமாக இப்போது பார்ப்போம்…

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 8ம் தேதி தமிழ்த்தாய் வாழ்த்து முழங்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்கியது. ஆளுநரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இதனை அடுத்து ஆளுநர் தமது உரையை தொடர்ந்தார். பின்னர் அவரது உரையை பேரவை தலைவர் தனபால் மொழிபெயர்த்து பேசினார். பெண்களுக்கு இருசக்கர வாகன மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ், உதவித் தொகையின் உச்சவரம்பு 20 ஆயிரம் ரூபாயிலிருந்து 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டது. ஆனால் ஆளுநர் உரையில் வளர்ச்சித் திட்டங்கள் எதுவுமில்லை என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

இதனிடையே ஆளுநர் உரை மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாகவும், நடப்பது அதிமுக ஆட்சியா? அல்லது பாஜக ஆட்சியா என்ற சந்தேகம் எழுவதாவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டினார்.

இரண்டாம் நாள் அவை தொடங்கியவுடன் மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் 12 பேருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஒக்கி புயலால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து அனைத்து உறுப்பினர்களும் 2 நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து பேரவையில் ஒக்கி புயல் பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்தார். அப்போது ஒகி புயலை தேசிய பேரடராக அறிவிக்க வேண்டும் என தாம் பிதமரிடம் வலியுறுத்தியதாகவும் முதற்கட்டமாக பேரிடர் நிவாரணநிதியாக 313 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து பேசிய திமுக உறுப்பினர் ஜெ.அன்பழகனுக்கு அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரது கருத்தும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. இதையடுத்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதேபோல் கேள்வி நேரத்தில் ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் பேசினார். அப்போது அமைச்சர் தங்கமணி, டிடிவி தினகரன் தி.மு.க.வுடன் கூட்டு வைத்திருப்பதாக கூறினார். இதற்கு பதிலளிக்க வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் சட்டசபையில் இருந்து டிடிவி தினகரன் வெளிநடப்பு செய்தார்.

மூன்றாம் நாள் கூடிய சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் ஊதியம் 55 ஆயிரத்தில் இருந்து 1 புள்ளி 05 லட்சமாக உயர்த்துவதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவிற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதுகுறித்து திமுகவினர் பேசவும் அனுமதிக்கப்படவில்லை. அதேபோல் குட்கா விவகாரம் குறித்து கேள்வி எழுப்பவும் திமுக அனுமதிக்கப்படவில்லை. இதனால் திமுக உறுப்பினர்கள் கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் உடனடியாக அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். வெளியே வந்த ஸ்டாலின் ”போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய பிரச்சனை இருக்கும் போது எம்.எல்.ஏ.க்கள் ஊதிய உயர்வு மசோதா அவசியமா?” என்று கேள்வி எழுப்பினார்.

நான்காம் நாளான நேற்று தமிழக சட்டப்பேரவை கூடியதும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்டதை கொண்டாடும் வகையில் ஜனவரி 17-ம் தேதியன்று தமிழ்நாடு பொன்விழா ஆண்டாக கொண்டாடப்படும் என தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்தார். தமிழ்நாடு என பெயர் சூட்டியதை தொடர்ந்து, வருகிற 17-ம் தேதி 50 ஆண்டுகள் நிறைவு பெறுவதாகவும் அவர் கூறினார்.

தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டி, சிறப்பாக ஆட்சி செய்த முதலமைச்சர் யார்? என்பது தொடர்பாக, சட்டப்பேரவையில், அதிமுக, திமுக எம்எல்ஏக்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து மாநகராட்சி மேயர்கள், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை மக்களே தேர்வு செய்ய புதிய சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்தார். நேரடி தேர்வு மூலம் சிறந்த நிர்வாக முறையை கொண்டு வர முடியும் என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தனி அதிகாரிகள் பதவிக்காலத்தை 4-வது முறையாக நீட்டிக்கும் சட்ட முன்வடிவு பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. சட்ட முன்வடிவுக்கு அறிமுக நிலையிலேயே திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முன்னதாக வெளிமாநிலங்களில் தங்கி படிக்கும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும் என தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதனிடையே பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு இடையேயும், போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கும் இடையே தொடங்கிய பேரவை இன்றுடன் நிறைவு பெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *