ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்த வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்; திமுக உயர்நிலை குழு கூட்டத்தில் தீர்மானம்;

ஆர்.கே நகரில் பணப்பட்டுவாடா செய்த வேட்பாளர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. செயல் தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பொதுச்செயலாளர் அன்பழகன், முதன்மைச் செயலாளர் துரைமுருகன், எம்.பி கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஒரு மணிநேரம் நடைபெற்ற கூட்டத்தில், ஒக்கி புயல் நிவாரணத்திற்கு தமிழக அரசு கோரிய 13 ஆயிரத்து 520 கோடி ரூபாயை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும், ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் திமுகவினர் செயல்பாடு குறித்து மூன்று பேர் ஆய்வு செய்த பின்னர், பணியாற்ற தவறிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆர்.கே நகரில் பணப்பட்டுவாடா செய்த வேட்பாளர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும், , 2ஜி வழக்கில் விடுதலை ஆன கனிமொழி, அ.ராசா ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தல் உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பெரும்பான்மை இல்லாத அதிமுக ஆட்சியை வேடிக்கைப் பார்க்கும் மத்திய அரசை கண்டிக்கும் வகையில் சட்டமன்றத்தில் தங்கள் குரல் ஒலிக்கும் என்று தெரிவித்தார்.

இதனிடையே ஜனவரி 7ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் மாவட்டச் செயலாளர் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *