ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்துகிற அரசியல் பிரிவு பாஜக என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
காந்தியின் நினைவு நாளையொட்டி திராவிடர் கழகம் சார்பில் சென்னை பெரம்பூரை அடுத்த அகரத்தில் கருத்துரிமை பாதுகாப்பு மதவெறி கண்டன திறந்த வெளி மாநாடு நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் இம்மாநாட்டில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இந்து மதத்தை பாதுகாக்க பெரிதும் அக்கறையோடு செயல்பட்டவர் காந்தியடிகள் என்றும், தீண்டாமை ஒழிப்பில் தீவிரம் காட்டியவர் என்றும் கூறினார்.
ஆர்எஸ்எஸ் ஆபத்தான அமைப்பு என்று கூறிய அவர், ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்துகிற அரசியல் பிரிவு பாஜக என்று குற்றம் சாட்டினார். மேலும் கவிஞர் வைரமுத்துவை தரக்குறைவாக விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி வரும் 5ம் தேதி அனைத்து கட்சிகளின் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறினார்.

