வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கக் கோரிய மனு மீது மத்திய அரசும், தேர்தல் ஆணையமும் 2 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரவி என்பவர் தொடர்ந்த பொது நல வழக்கில், தேர்தலின்போது, சில அரசியல் கட்சிகளால் வாக்காளர் பட்டியலில் நடைபெறும் முறைகேடுகளைத் தவிர்க்க வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்றும், அதுவரை, சட்டமன்ற இடைத்தேர்தல், நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல்களை நடத்தக் கூடாது என உத்தரவிடுமாறும் கோரியிருந்தார்.
உயர்நீதிமன்ற நீதிபதிகள் மணிகுமார், ஆஷா அடங்கிய அமர்வில் ஆஜரான தேர்தல் ஆணையத் தரப்பு வழக்கறிஞர்,அதற்கான பணியை ஏற்கெனவே முன்னெடுத்த நிலையில், உச்சநீதிமன்றத் தீர்ப்பால் சட்ட அதிகாரம் இல்லாமல் போய் நிறுத்தவிட்டதாகத் தெரிவித்தார். அதற்கான சட்டத்தை மத்திய அரசுதான் உருவாக்க வேண்டும் என தெரிவித்ததை ஏற்ற நீதிபதிகள், மத்திய உள்துறை, சட்டத்துறை, ஆதார் ஆணையத்தை எதிர் மனுதாரர்களாக சேர்த்து, மனு தொடர்பாக தேர்தல் ஆணையம் தரப்பிலும் 2 வாரங்களில் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தார்.

