அலோக் வர்மாவின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டதைக் கண்டித்து டெல்லியில் ராகுல்காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம்

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டதைக் கண்டித்தும், சிபிஐ அமைப்பை மத்திய அரசு வளைக்கப் பார்ப்பதாகவும் குற்றம்சாட்டி, ராகுல்காந்தி தலைமையில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் டெல்லியில் நடைபெற்றது.

மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ-யில், இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தனா இடையே ஏற்பட்ட மோதலுக்கு, பிரதமர் மோடியே காரணம் என ராகுல்காந்தி குற்றம்சாட்டியிருந்தார். பிரதமர் மோடிக்கு பிரியமான ராகேஷ் அஸ்தனா, சிபிஐ-யில் இரண்டாம் நிலை பொறுப்புக்கு ஊடுருவியவர் என்றும், அவர் மீது லஞ்ச வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் ட்விட்டர் பதிவில் ராகுல்காந்தி கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்தே அலோக் வர்மாவின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டதாகவும், ரஃபேல் விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெறாமல் தடுக்கும் வகையில், தலைமைப் பொறுப்பில் இருந்து அலோக் வர்மாவை நீக்க முயற்சி நடைபெறுவதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இதைக் கண்டித்தும், சிபிஐ அமைப்பின் செயல்பாடுகளில் மத்திய அரசு தலையிடுவதாகக் கூறியும் காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் இன்று போராட்டங்களை அறிவித்திருந்தது. இதன் ஒருபகுதியாக, டெல்லியில் ராகுல்காந்தி தலைமையில் பேரணி நடைபெற்றது.

இதில் காங்கிரஸ் மற்றும் தோழமைக் கட்சிகளின் தலைவர்களும், தொண்டர்களும் திரளாகப் பங்கேற்றனர். டெல்லியில் தயால் சிங் கல்லூரியில் இருந்து புறப்பட்ட பேரணி சிபிஐ தலைமையகத்தில் முடிவடைந்தது. பின்னர் சிபிஐ தலைமையகத்தின் முன்பாக, ராகுல்காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஐ அமைப்பை மத்திய அரசு வளைக்கப் பார்ப்பதாகக் கூறி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *