அமெரிக்காவில் சட்ட விரோத குடியுரிமையை தடுக்க மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளார். அதற்கு தேவைப்படும் 2,500 கோடி அமெரிக்க டாலர் நிதியை பெற டிரம்ப் அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கான ஒப்புதல் பெறும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் வருகிற 29ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. ஆனால் இந்த மசோதாவை எதிர்ப்பதற்கு, எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளதால் டிரம்புக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ‘டிரீமர்ஸ்’ எனப்படும் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவதை தள்ளி வைக்கும் ‘டாகா’ எனப்படும் திட்டம் ஒபாமா அதிபராக இருந்தபோது அமல்படுத்தப்பட்டது. ஆனால் தற்போதைய அதிபர் டிரம்ப், அவர்களை வெளியேற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில் ஆளும் குடியரசு கட்சி உறுப்பினர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய டிரம்ப், மெக்சிகோ எல்லை சுவர் கட்ட தேவையான நிதியை வழங்க எதிர்கட்சி உறுப்பினர்கள் ஒப்புதல் வழங்கினால், ‘டிரீமர்ஸ்’ எனப்படும் சட்ட விரோதமாக குடியேறிவர்களுக்கு அடுத்த 10 முதல் 12 ஆண்டுகளில் குடியுரிமை வழங்க ஆவண செய்யப்படும் என தெரிவித்துள்ளார். இதன்மூலம் பல்லாயிரக்கணக்கான இந்தியாவை சேர்ந்தவர்கள் உட்பட 18 லட்சம் பேர் குடியுரிமை பெறுவார்கள்.
2018-01-27

