அதிகனமழை எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்ட நிலையில், நெல்லை மாவட்டம் குற்றாலம், கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த மழையால் குற்றாலத்தில் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அருவிகளில் நீர்வரத்து சீரானது. இதையடுத்து அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அதிகனமழை எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்ட நிலையிலும், கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாகவே காணப்பட்டது. வழக்கமாக விடுமுறை தினங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்படும் நிலையில், இன்று அருவிக்கு குறைந்த அளவிலான சுற்றுலாப் பயணிகளே வந்திருந்தனர்.
தேனி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க நான்காம் நாளாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அபாய அளவைத் தாண்டித் தண்ணீர் விழுவதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

