பள்ளி மாணவர்களிடம் தலா 2 லட்சம் ரூபாய் முன்வைப்புத் தொகை வசூலித்த விவகாரத்தில் சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த எஸ்.எஸ்.எம். பள்ளி தாளாளர் சந்தானத்தை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெருங்களத்தூர் மற்றும் குரோம்பேட்டையில் ஸ்ரீமதி சுந்தரவள்ளி நினைவு பள்ளி கடந்த 1983ம் வருடம் முதல் இயங்கி வருகிறது. இந்த இரண்டு பள்ளிகளிலும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கின்றனர். ஸ்ரீமதி சுந்தரவள்ளி நினைவு பள்ளிகளின் தாளாளராக இருக்கும் சந்தானம், மாணவர்களின் பெற்றோரிடம் அடுத்த கல்வி ஆண்டுக்கான கட்டணம் என்று கூறி 2 லட்சம் ரூபாய் முன் வைப்புத் தொகை செலுத்துமாறு கேட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் 2 லட்சம் ரூபாய் பணம் கட்ட முடியாது என திட்டவட்டமாக தெரிவித்த பெற்றோர், இதுதொடர்பாக சிட்லப்பாக்கம், பீர்க்கன்கரணை காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடமும் அவர்கள் முறையிட்டனர்.
யாரும் பணம் கட்ட முன்வராததால் செவ்வாய்கிழமை காலை வழிபாட்டுக் கூட்டத்தின் போது, மாணவர்களை தரக்குறைவாக சந்தானம் பேசியதாக கூறப்படுகிறது. பணம் கட்ட விருப்பமில்லதாவர்கள் மாற்றுச் சான்றிதழ் பெற்று செல்லுமாறும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் புகார் குறித்து நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்தும் பள்ளியை கண்டித்தும் பெற்றோர் மீண்டும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட பள்ளி நிர்வாகி ஒருவரை பெற்றோர் தங்கள் செல்போனில் படம் பிடிக்க முயன்ற போது மோதல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதை தடுப்பதற்காக பள்ளி வளாகத்திற்குள் போலீசார் சென்றனர்.
விசாரணையில் சந்தானம் மாணவர்களிடம் பணம் கேட்டது உறுதியானதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அதிகமான கல்விக்கட்டணம், பெற்றோரை மிரட்டுவது, அரசு பணியாளர்களை பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட 11 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் ஸ்ரீமதி சுந்தரவள்ளி நினைவு பள்ளிகளின் தாளாளர் சந்தானம், நிர்வாகிகள் செல்வகுமார், கார்த்திகேயன், ராகவன் , ரங்கநாதன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை தாம்பரம் நீதிமன்றத்தில் நீதிபதி முன் நிறுத்தி புழல் சிறையில் போலீசார் அடைத்துள்ளனர். தாளாளர் கைதானால் பள்ளி காலவரையின்றி மூடப்படும் என ஸ்ரீமதி சுந்தரவள்ளி நினைவு பள்ளி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. காலவரையின்றி மூடப்படும் என்ற அறிவிப்பை திரும்ப பெற்றுள்ளதாக பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால், பள்ளி வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

