மெகுல்சோக்சி விவகாரம் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி பதவி விலக வேண்டும் என்று ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். மெகுல்சோக்சியின் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்திடமிருந்து, அருண்ஜேட்லியின் மகள் மற்றும் மருமகனின் சட்ட நிறுவனம், சட்ட ஆலோசனை வழங்குவது தொடர்பாக 24 லட்ச ரூபாய் பெற்றதாக, காங்கிரஸ் கட்சி நேற்று குற்றம்சாட்டியிருந்தது.
பஞ்சாப் நேசனல் வங்கிக் கடன் மோசடி விவகாரத்தில் சிக்கி, கடந்த ஜனவரியில் மெகுல்சோக்சி நாட்டைவிட்டு ஓடியதாகவும், அதன் பிறகு 24 லட்ச ரூபாயை அருண்ஜேட்லியின் மகளும், மருமகனும் திருப்பிக் கொடுத்துவிட்டதாகவும் காங்கிரஸ் கூறியிருந்தது.
இதைக் குறிப்பிடும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, மெகுல்சோக்சியின் ஊதியப்பட்டியலில் அருண்ஜேட்லியின் மகள் இருந்ததாகவும், நிதியமைச்சரோ மெகுல்சோக்சி கோப்புகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்து, அவர் தப்பி ஓட அனுமதித்து விட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். அருண்ஜேட்லியின் மகள் பணம் பெற்ற வங்கிக் கணக்கு எண்ணையும் குறிப்பிட்டுள்ள ராகுல்காந்தி, இந்த விஷயத்தை ஊடகங்கள் இருட்டடிப்பு செய்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

