கொளத்தூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் தொடர்புடைய நாதுராம் சென்னை அழைத்து வரப்பட்டார்.
கடந்த ஆண்டு நவம்பர் 16ம் தேதி, கொளத்தூரில் நடந்த நகைக்கடைக் கொள்ளை வழக்கில் ராஜஸ்தானைச் சேர்ந்த நாதுராம், அவனது கூட்டாளி தினேஷ் சவுத்திரி ஆகியோர் தேடப்பட்டு வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக நாதுராமை தேடி ராஜஸ்தான் சென்ற போதுதான் ஆய்வாளர் பெரியபாண்டியன் கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தை அடுத்து, நாதுராமைத் தீவிரமாக தேடிவந்த ராஜஸ்தான் போலீசார் கடந்த 13 ம் தேதி, குஜராத் மாநிலத்தில் நாதுராமைக் கைது செய்தனர். இந்நிலையில், நாதுராமை கொளத்தூர் கொள்ளை வழக்கில் கைது செய்வதற்காக, சென்னை வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் ஜெயராமன் தலைமையிலான 8 பேர் கொண்ட தனிப்படையினர் ராஜஸ்தான் சென்றனர். சென்னையில் எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த கைது வாரண்டை ராஜஸ்தான் காவல்துறையினரிடம் சமர்ப்பித்த சென்னை போலீசார், நாதுராமை, ஜெய்ப்பூரிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர்.

