சிலர் தங்களது சுயநலத்திற்காக கவிஞர் வைரமுத்து மீது தாக்குதல் நடத்துவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தி.மு.க செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அறிஞர் ஒருவர் ஆண்டாள் குறித்து கூறிய இருந்த கருத்தை சுட்டிக்காட்டியதால் கவிஞர் வைரமுத்து சர்ச்சையில் சிக்கினார். வைரமுத்துவின் கருத்துக்கு பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா உள்ளிட்டோர் கீழ்த்தரமான விமர்சனங்களை முன்வைத்தனர். இந்நிலையில் வைரமுத்து மீதான கடுமையான விமர்சனத்திற்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அநாகரீகத்திற்கும், வரம்பு மீறலுக்கும் நிச்சயம் தமிழகத்தில் இடமில்லை என்று தெரிவித்துள்ளார். சிலர் தங்களது சுயநலத்திற்காக கவிஞர் வைரமுத்து மீது தாக்குதல் நடத்துவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேபோல் ஹெச். ராஜாவின் பேச்சுக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகியோர் கூட்டாக கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழ் மண்ணில் சமூக அமைதியை குலைப்பதை தமிழ் சமூகம் வேடிக்கை பார்க்கக் கூடாது என்றும், தனது கருத்துக்கு ஹெச்.ராஜா உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

